பெண் காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு.
கடந்த மாதம் நாகமலைப் புதுக்கோட்டையில் தையல் தொழிலாளியை மிரட்டி ரூபாய் பத்து லட்சம் பணம் பறித்த வழக்கில், அந்தப் பகுதி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
தனக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வசந்தி தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "காவல் ஆய்வாளர் வசந்தி, காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து மறுத்து வருகிறார். இதுவரை அவரிடம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் ஜாமீன் வழங்கக் கூடாது", என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி புகழேந்தி, "காவல் ஆய்வாளர் வசந்தி மீதுள்ள குற்றச்சாட்டு, அவர் சார்ந்த துறையைக் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொண்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என நீதிமன்றம் விரும்புகிறது.
நீதிமன்ற தலையீட்டிற்குப் பின்பே, வசந்தி கைது செய்யப்பட்டார். இதுவரை அவரது வீடு மற்றும் உறவினர் இடங்களில் ஏதேனும் சொத்துகள் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட வில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.
காவல் ஆய்வாளர் வசந்தி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க என்ன ஆவணங்கள் இருக்கிறது? அவர் பணியாற்றிய நாகமலைப் புதுக்கோட்டை மற்றும் மதுரை தல்லாகுளம் காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும்", என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டெம்பர் 30ம் தேதிக்கு நீதிபதி புகழேந்தி ஒத்திவைத்தார்.


Comments
Post a Comment